வவுனியா வடக்கில் இனம்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.



தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'கொட்டமடிக்காதே கொடுங்கோல் அரசே, எங்கள் மண் எங்கள் குருதி, திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும், தமிழர் இன்பரம்பலை சூறையாடும் எண்ணத்தை நிறுத்து, எங்கள் தாயகத்தில் எங்களை நிம்மதியாக வாழவிடு, தமிழன் ஒன்றும் 700 பேருடன் நாடு கடத்தப்பட்டவன் அல்ல, சர்வசே தலையீடு உடன் தேவை, இது ஒன்றும் படகில் வந்த குடியேற்றம் அல்ல' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

அத்துடன், ' அனுராதபுரத்தின் எல்லைப்புறத்தில் உள்ள 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்குடன் இணைப்பதை நிறுத்து, நிறுத்து நிறுத்து சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இராணுவமே வெளியேறு, தமிழர் தேசம் வவுனியா வடக்கு, வடக்கும் - கிழக்கும் தமிழர் தாயகம்' என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்(Gajendrakumar Ponnambalam) பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.